தேசிய விளையாட்டு விழா உதைபந்தாட்ட தொடர் யாழ்ப்பாணத்தில்

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து நடத்தும் 48ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான உதைபந்தாட்ட போட்டிகள் எதிர்வரும் வியாழக்கிழமை (27) முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு மற்றும் அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளாக இடம்பெறுகின்ற இந்த போட்டியில், ஒன்பது மாகணங்களினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 18 அணிகள் பங்கெடுக்கின்றன.

ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முறையே வட மாகாணம் மற்றும் வட மேல் மாகாண அணிகள் நடப்பு சம்பியன்களாக களம் காணுகின்றனர். அதேவேளை, இறுதியாக இடம்பெற்ற இரண்டு தொடர்களிலும் வட மாகாண அணி ஆண்கள் பிரிவில் தங்கம் வென்று தமது ஆதிக்கத்தினை நிலைநாட்டியிருக்கின்றது.

இம்மாதம் 27ஆம் திகதி காலை 8 மணிக்கு துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறவிருக்கின்ற ஆரம்ப விழாவில் அண்மையில் மறைந்த யாழ்ப்பாணத்தினை பூர்வீகமாகக்கொண்ட Olympian நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்கள் நினைவுகூரப்படவிருக்கின்றார்.

அதனைத்தொடர்ந்து, ஆண்கள் பிரிவில் ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாண அணிகளிற்கிடையிலான போட்டியுடன் போட்டித்தொடரானது ஆரம்பமாகின்றது. 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறுகின்ற இரு பிரிவினருக்குமான இறுதிப் போட்டிகளுடன் போட்டித்தொடரானது நிறைவிற்கு வரவிருக்கின்றது.

கடந்த 2016 ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்த போட்டித்தொடர் யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றமை முக்கிய அம்சமாகும்.

போட்டி இடம்பெறுகின்ற நான்கு நாட்களிலும் வடபுலத்தின் காற்பந்தாட்ட ரசிகர்கள் மட்டுமன்றி, நாட்டின் சகல பகுதிகளிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தெரிவு செய்யப்பட்ட போட்டிகளினை நீங்கள் எமது Onfield Facebook மூலமாக நேரடியாக கண்டுகளிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *