ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பியது பாகிஸ்தான்..

நியூசிலாந்து அணிக்கு எதிரான 5ஆவதும் இறுதியுமான ரி20 போட்டியில் இப்திகார் அஹமட் இன் சுழலால் சுருட்டிய பாகிஸ்தான் அணி 42 ஓட்டங்களால் ஆறுதல் வெற்றியை பதிவு செய்த போதிலும் தொடர் 4:1 என நியூசிலாந்து வசமானது.

சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் 4 போட்டிகளிலும் நியூசிலாந்து அசத்தல் வெற்றிகளைப் பதிவு செய்து ஒரு போட்டி மீதமிருக்க தொடரை 4:0 என கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில் தொடரின் 5ஆவதும் இறுதியுமான போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு வெள்ளையடித்துக் முனைப்புடன் நியூசிலாந்து அணியும் தொடரில் ஆறுதல் வெற்றியை பெற பாகிஸ்தான் அணியும் களம் கண்டது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஷஹீன் அப்ரிடி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தெரிவு செய்தார்.

இதற்கமைய களம் நுழைந்த பாகிஸ்தான் அணிக்கு பக்கர் ஸமான் 33, முஹம்மது ரிஸ்வான் 38 , பாபர் அஸாம் 13 என முன்னனி வீரர்கள் ஓட்டங்களை சேர்த்துக் கொடுக்க பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை எடுத்தது. பந்துவீச்சில் சௌத்தி, ஹென்றி, போர்க்குஸன் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் இலகுவான135 என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலளித்த நியூஸிலாந்து அணிக்கு முன்வரிசை வீரர்கள் மாத்திரம் ஓரளவிற்கு இரட்டை இலக்க ஓட்டங்களைப் பெற மத்திய மற்றும் பின் வரிசை வீரர்களுக்கு இப்திகார் அஹமட் இடைஞ்சல் கொடுத்து பெவிலியன் அனுப்பி வைக்க நியூசிலாந்து அணி 17.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்து 92 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொள்ள பாகிஸ்தான் அணி 42 ஓட்டங்களால் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. துடுப்பாட்டத்தில் பிலிப்ஸ் 28 மற்றும் அலென் 22 ஓட்டங்களை சேர்த்தனர். பந்துவீச்சில் இப்திகார் அஹமட் , நவாஸ் மற்றும் அப்ரிடி ஆகியோர் முறையே 3,2 மற்றும் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இப் போட்டியின் நாயகனாக இப்திகார் அஹமட்டும் தொடரின் நாயகனாக பின் அலனும் தெரிவாகினர். 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை நியூசிலாந்து அணி 4:1 என கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *