கொழும்பு ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியின் பழைய மாணவர்களாகிய 80 களின் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட அழைப்பு உதைப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான 14ஆவது ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ணம் 2024 தொடரின் இறுதிப் போட்டியில் சென் தோமஸ் கல்லூரி அணியை 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சம்பியன் மகுடத்தினை தனதாக்கியது கொழும்பு ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி.
விலகல் முறையில் இடம்பெற்ற இத்தொடரில் இலங்கையின் 20 பாடசாலை அணிகளின் பங்கேற்றிருந்தன.
இதனடிப்படையில் காலிறுதி ஆட்டங்கள் முடிவில் 4 அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. இதில் முதல் அரியிறுதிப் போட்டியில் நீர்கொழும்பு அல் ஹிலால் கல்லூரி அணியை 6:1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென் தோமஸ் கல்லூரி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.
பின்னர் இடம்பெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில் 3:0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் கேட்வே சர்வதேச பாடசாலை அணியை வீழ்த்திய ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி இரண்டாவது அணியாக இறுதிக்குள் நுழைந்தது.
இதற்கமைய கடந்த 7ஆம் திகதி கொழும்பு சுகததாச மைதானத்தில் மின்னொளியில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதின. ஆட்டத்தின் ஆரம்பம் முதல் ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி வீரர்கள் எதிரணி கோல் கம்பங்களை முழுமையாய் ஆக்கிரமித்ததுடன் தமது தடுப்பை வீரர்களை சிறப்பாக கையாண்டனர். இதனால் போட்டி முடிவில் 3:0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் சென் தோமஸ் கல்லூரி அணியை வீழ்த்திய ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி அணி நடப்பாண்டின் சம்பியன் மகுடத்தினை தனதாக்கியது.
அவ்வணிக்கான மூன்று கோல்களையும் முன்கள வீரர் அர்ஹம் பெற்றுக்கொடுத்து இறுதிப் போட்டியில் தனது ஹெட்ரிக் கோலையும் பதிவு செய்தார்.
இத்தொடரின் 3ஆம் இடத்துக்கான போட்டியில் நீர்கொழும்பு அல் ஹிலால் கல்லூரி அணியை கேட்வே சர்வதேச பாடசாலை அணி வீழ்த்தியது.