வெற்றியுடன் பிபா தொடரை நிறைவு செய்த இலங்கை

பூட்டான் அணியை 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட இலங்கை உதைபந்தாட்ட அணி இந்த வருடம் தாம் விளையாடிய முதலாவது பிபா தொடரினை நம்பிக்கையுடன் நிறைவு செய்துகொண்டது.

பபுவா நியுகீனியா, மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் தெற்காசிய நாடான பூட்டான் ஆகிய நாடுகளுடன் இலங்கை மோதிய இந்த தொடர் கடந்த 22ஆம் திகதி கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் ஆரம்பமாகியது.

தொடரின் முதல் போட்டியில் மத்திய ஆபிரிக்க குடியரசு அணியினர் 6-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் பூட்டான் அணியை இலகுவாக வெற்றி கொண்டதுடன், முதல் நாளின் இரண்டாவது ஆட்டமாக இடம்பெற்ற இலங்கை மற்றும் பபுவா நியுகீனியா அணிகளுக்கு இடையிலான போட்டி கோல்கள் எதுவும் இன்றி சமநிலையடைந்தது.

இந்நிலையில் தொடரின் இறுதி நாளான நேற்று (25) இடம்பெற்ற முதல் போட்டியில் மத்திய ஆபிரிக்க குடியரசு வீரர்கள் 4-0 என்ற கோல்கள் கணக்கில் பபுவா நியுகீனியா அணியை வெற்றி கொண்டனர்.

இறுதிக்கட்ட பயிற்சிகளில் இலங்கை அணி ; வாய்ப்பை இழக்கும் அணித் தலைவர் ஷரித – Onfield

பின்னர் இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் பூட்டான் அணிகள் மோதின. வெற்றிக்கான மிகப் பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் சொந்த மைதான ரசிகர்களின் முன் களமிறங்கிய இலங்கை வீரர்கள் முதல் பாதியை கோல்கள் எதுவும் இன்றி சமநிலையில் நிறைவு செய்தனர்.

பின்னர் இரண்டாம் பாதி ஆரம்பமாகி இரண்டு நிமிடங்கள் செல்வதற்குள் இளம் வீரர் டிலொன் டி சில்வா இலங்கை அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

தொடர்ந்து அடுத்த 8 நிமிடங்களில் ஒலிவியர் கெலாட் இலங்கை அணிக்கான அடுத்த கோலையும் பெற்றுக் கொடுக்க ஆட்டத்தில் இலங்கை இரண்டு கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது.

அதன் பின்னர் எந்தவித மேலதிக கோலும் பெறப்படாத நிலையில் ஆட்டத்தில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

தொடரில் மத்திய ஆபிரிக்க அணி இரண்டு வெற்றிகளைப் பெற்ற அதேவேளை, இலங்கை ஒரு வெற்றி மற்றும் ஒரு சமநிலையான முடிவைப் பெற்றது. பபுவா நியுகீனியா வீரர்கள் ஒரு சமநிலை மற்றும் ஒரு தோல்வியை பதிவு செய்ய, பூட்டான் வீரர்கள் தாம் எதிர்கொண்ட இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தனர்.  

மேலும் செய்திகளுக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *