ஸாஹிராவை வீழ்த்தி சம்பியனாகியது ஹமீட் அல் ஹுசைனி

இலங்கையின் முன்னணி பாடசாலை அணிகள் மோதும் 18 வயதிற்கு உட்பட்ட பிரிவு 1 பாடசாலை அணிகளுக்கு இடையிலான Renown President Schools Football Championship 2023 தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு ஸாஹிரா கல்லூரியை 4-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட கொழும்பு ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி வீரர்கள் தொடரின் சம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டுள்ளனர்.

இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ரினோன் கால்பந்து அகடமியின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு சுகததாச அரங்கில் மார்ச் 9ஆம் திகதி மாலை இடம்பெற்றது.

ஏற்கனவே இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் கொழும்பு ஸாஹிரா வீரர்கள் புனித ஜோசப் கல்லூரியை வெற்றி கொண்டும், ஹமீட் அல் ஹுசைனி வீரர்கள் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியை வெற்றி கொண்டும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியின் முதல் கோலை ஹமீட் அல் ஹுசைனி வீரர்கள் தமக்கு கிடைத்த பிரீ கிக் வாய்ப்பின்மூலம் பெற்றுக்கொண்டனர். எனினும் அடுத்த சில நிமிடங்களில் ஸாஹிரா வீரர்கள் பதில் கோல் பெற்று போட்டியை சமப்படுத்தினர்.

எனினும், தொடர்ந்து வேகமாக விளையாடிய ஹமீட் அல் ஹுசைனி வீரர்கள் முதல் பாதி முடிவதற்குள் மேலும் 3 கோல்களைப் பெற, முதல் பாதி ஆட்டம் 4-1 என முடிவுற்றது.

பின்னர் ஆரம்பித்த இரண்டாம் பாதியில் ஸாஹிரா வீரர்கள் ஒரு கோலைப் பெற்றனர். மேலதிக கோல்கள் எதுவும் போட்டியில் பெறப்படாமையினால், போட்டி நிறைவில் 4-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி Renown President Schools Football Championship 2023 தொடரின் சம்பியன்களாக முடிசூடிக்கொண்டது.

இதேவேளை, தொடரின் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணி கொழும்பு சென் ஜோசப் கல்லூரியை வீழ்த்தி மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *