வெற்றியின்றி நாடு திரும்பும் இலங்கை 17 வயதின்கீழ் அணி

பூட்டானில் இடம்பெற்ற தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் 17 வயதின்கீழ் சம்பியன்ஷிப் (SAFF Under-17 championship 2024) தொடரில் இலங்கை இளையோர் அணி எந்தவித வெற்றியும் இன்றி தொடரை நிறைவு செய்துள்ளது.


தொடரில் B குழுவில் இடம்பெற்ற இலங்கை வீரர்கள் தமது முதல் போட்டியில் செப்டம்பர் 21ஆம் திகதி வரவேற்பு நாடான பூட்டானுடன் விளையாடினர். அந்தப் போட்டியை பூட்டான் 5-1 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வெற்றிகொண்டது. இலங்கை அணிக்காக கொழும்பு ஸாஹிரா கல்லூரி மாணவன் மொஹமட் ஸைட் 65ஆவது நிமிடத்தில் கோலைப் பெற்றுக்கொடுத்தார்.


இலங்கை அணியினர் 23ஆம் திகதி நேபாளம் அணிக்கு எதிராக விளையாடிய தமது இரண்டாவது போட்டியிலும் 4 – 0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியை சந்தித்தனர்.

இலங்கை 17 வயதின்கீழ் தேசிய அணிக்கான வீரர்கள் தெரிவுக்கு அழைப்பு


இந்நிலையில், தொடரில் குழுநிலையில் தமது இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி பாகிஸ்தானை செப்டம்பர் 25ஆம் திகதி எதிர்கொண்டது. குறித்த போட்டியில் ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தான் வீரர்கள் போட்டியை 5-1 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வெற்றி கொண்டனர்.


இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 கோல்களால் முன்னிலையில் இருந்த வேலையில் போட்டியின் 77ஆவது நிமிடத்தில் ஸகரிய்யா ஸபருல்லா இலங்கை அணிக்கான ஆறுதல் கோலைப் பதிவு செய்தார்.


எனவே, தாம் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்த இலங்கை அணி எந்தவித புள்ளிகளையும் பெறாமல் முதல் சுற்றோடு வெளியேறியது.


தொடரில் குழு Aயில் முதலிரு இடங்களையும் பெற்ற இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளும், குழு B யில் முதலிரு இடங்களையும் பெற்ற பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளும் இம்முறை 17 வயதின்கீழ் SAFF சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதித் தொடருக்கு தகுதி பெற்றன.

மேலும் செய்திகளுக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *