சீ ஹோக்ஸ் அணியை வீழ்த்திய ஏறாவூர் YSSC

புத்தளம் லெஜன்ஸ் உதைப்பந்தாட்ட கழகம் ஏற்பாடு செய்திருந்த சினேகபூர்வ கண்காட்சி உதைபந்தாட்ட போட்டியில் இலங்கையின் முதல்தர தொடரான சுபர் லீக்கில் பங்கேற்கும் கழகமாக இலங்கை கடற்படையின் சீ ஹோக்ஸ் அணியை 2:1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய ஏறாவூர் இளந்தாரகை விளையாட்டுக் கழக அணி (YSSC) வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுக்கொண்டது.

புத்தளம் நகரசபை மைதானத்தில் வெள்ளிக்கிழமை (2) பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமான இப்போட்டியில் இரு கழக வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் அனுபவமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்திய சீ ஹோக்ஸ் அணி தேசிய அணி வீரர் மொஹமட் ஹஸ்மீர் மூலம் முதல் கோலை பதிவு செய்தது. இருப்பினும் பதில் கோல் அடிக்கும் இளந்தாரகை (YSSC) வீரர்களின் முயற்சி பலனில்லாமல் போக முதல் பாதி 1:0 என  சீ ஹோக்ஸ் வசமானது.

கிண்ணத்திற்கான இறுதி மோதலில் ஸாஹிரா – அலிகார் அணிகள் –

பின்னர் ஆரம்பித்த இரண்டாவது பாதி ஆட்டத்தில் புது உத்வேகத்துடனும் வியூகத்துடனும் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் YSSC வீரர்கள் களம் கண்டனர். இருப்பினும் தமது முன்னிலையை தக்கவைத்துக் கொள்ள தடுப்பு ஆட்டத்தை மேற்கொண்ட  சீ ஹோக்ஸ் அணியின் வியூகங்களை முறியடித்து சிறப்பான பந்து பரிமாற்றம் மூலம் YSSC அணியின் சிரேஷ்ட வீரரும் இலங்கை தேசிய அணி வீரருமான மொஹமட் முஸ்தாக் அவ்வணிக்கான முதல் கோலை உட்செலுத்த மைதானம் கரகோசத்தால் அதிர்ந்தது. 

பின்னர் தொடர்ந்த போட்டியில் மிகச் சிறந்த பந்துப் பரிமாற்றத்தை பெற்ற முஸ்தாக் தன் பங்கிற்கு 2ஆவது கோலையும் உட்செலுத்த 2:1 என முன்னிலை பெற்றது YSSC கழகம். மேலதிக நேரத்தில் சீ ஹோக்ஸ் ணஅணியின் கோல் முயற்சிகள் கைகொடுக்காமல் போக போட்டி முடிவில் 2:1 என பலமிக்க இலங்கை  சீ ஹோக்ஸ் கழகத்தை வீழ்த்தியது இளம் வீரர்களைக் கொண்ட YSSC கழகம்.

இந்த அணியில் விளையாடிய அதிகமான வீரர்கள், அண்மையில் நிறைவடைந்த பிரிவு ஒன்று 20 வயதின்கீழ் பாடசாலை அணிகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட தொடரில் சம்பியன் கிண்ணத்தை வென்ற ஏறாவூர் அலிகார் அணியில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.